Tuesday, August 27, 2013

வெளிநாட்டு மாப்பிள்ளை'

'கடவுளே! என்ன வெயில்? மனுசரை வாட்டி எடுக்குது. கோடை வெயில் கொழுத்தித் தள்ளுது. வெளியில போய் வாறதிற்குள்ள சீவன் போயிடும் போல இருக்கு' அலுத்துக் கொண்டார் குணம். வேகும் வெயிலில் அலைந்து திரிந்த களைப்பு அவரை வாட்டியெடுத்தது. குடையை மடித்து வாசலில் வைத்துவிட்டுஇ கிணற்றடிப் பக்கமாகச் சென்று முகத்தை அலசிக்கொண்டார். தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தைத் துடைத்தபடியே குசினிப் பக்கமாக உள்ளே சென்றார். அடுப்பில் உலை பொங்கி வடிந்துகொண்டிருந்தது. மரக்கறி வெட்டப்பட்ட நிலையில் சமைப்பதற்குத் தயாரகவிருந்தது. அடுப்புத் தணலைக் குறைத்து உலை மூடியைத் திறந்து அகப்பையால் துலாவி விட்டார். 'பார்வதி உலையை வைச்சிட்டு எங்க போயிட்டாள்?' வீட்டிற்குள் பார்வதியைக் காணவில்லை. எல்லாக் கதவுகளும் திறந்து கிடந்தன. 'எங்க போயிருப்பாள்? கடைக்குப் போயிருப்பாளோ? கதவுகளைத் திறந்திட்டுப் போக மாட்டாளே!' செம்பிற்குள் இருந்த தண்ணியை எடுத்து மடக் மடக்கென்று குடித்துவிட்டுஇ சேட்டைக் கழட்டி உடுப்பு றாக்கையில் மாட்டிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் போய் அமர்ந்து கொண்டார். நடந்து திரிந்த களைப்பு ஒருபுறம்இ போன காரியம் நிறைவேறாத ஏமாற்றம் மறுபுறம.; யன்னலினுடாக ஜில்லென்று வந்த காற்று காய்ந்திருந்த மேனியைக் குளிரச்செய்தது. அப்படியே கண்ணயர்ந்து போனார். வாசலில் குணத்தின் செருப்பைக் கண்ட பார்வதியம்மா படபடப்போடு உள்ளே நுழைந்தார். 'வந்து கனநேரமே? எப்ப வந்தனியள்?' தட்டியெழுப்பிய படியே 'முகமெல்லாம் காஞ்சு போய்க்கிடக்கு. போன காரியம் என்னப்பா? ஏதாவது அறிஞ்சனியளே?' கண் முழிப்பதற்குள் கேள்வி மழை பொழிந்தது. விழித்துக் கொண்டவர் முகத்தைக் கையால் ஒத்தியபடி 'நீ எங்கயப்பா போனனீ? நான் வரேக்குள்ள வீடெல்லாம் திறந்து கிடந்தது. ஆளையே காணேல்லை'.  'கடிதக்காரன் வந்தவன் அப்பா. பக்கத்து வீட்டை கடிதத்த குடுத்திட்டுஇ எங்கட வாசலத் தாண்டிப் பேசாம போறான்.'  'உனக்குக் கடிதம் வந்தாத்தானே தருவான். உன்ட கடிதத்த உனக்குத் தராம அவன்ட வீட்டையே கொண்டு போவான்? என்னப்பா கதைக்கிறா?'. 'அவன் விலாசத்தைக் கவனிக்காம கடிதத்தைக் கொண்டு போய்ட்டான் என்டா எங்களுக்குத் தெரியுமே?. அது தான் அவன்ட சைக்கிளுக்குப் பின்னால ஓடிப்போனான். அதுக்குள்ள அவன் சந்தியால திரும்பிட்டான். வழியில சரஸ்வதியிட மகளைக் கண்டிட்டு கதைச்சுக் கொண்டு நின்டனான். அவளின்ட தம்பியாரும் கனடாவெல்லே. பிள்ளையப் பற்றி அறியலாமெண்டு கதைய குடுத்தனான்.' 'வயசு போன நேரத்தில ஓடித்திரியாத. விழுந்து கிழுந்து போன அது வேற கரைச்சல் அப்பா.' 'அதை விடுங்கோ. நீங்க போன காரியம் என்னப்பா? பிள்ளையைப் பற்றி ஏதாவது அறிஞ்சனீங்களே?'  ஏக்கத்தோடு கேட்ட பார்வதியம்மாவின் முகத்தைப் பார்க்க பரிதாபமாகவிருந்தது. இன்றாவது நல்ல செய்தியோடு வருவார் என்று எதிர்பார்த்திருக்கும் பார்வதியம்மாவிற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திக்குமுக்காடினார். 'அவையிட்டையும் மருமகன்ட விலாசம் இல்லையாம். தாங்கள் தூரத்துச் சொந்தமாம். கனடாவில இருக்கினமெண்டு மட்டும் தானாம் அதுகளுக்குத் தெரியும். தங்களுக்கு அவையோட எந்தத் தொடர்பும் இல்லையாம்.'
          'என்னப்பா சொல்லுறியள் மருமகன் அவை தங்கட கிட்டத்துச் சொந்தமென்டெல்லோ சென்னவர். நீங்கள் மருமகன்ட சித்தி வீட்டை இன்னுமொருக்காப் போய்க் கேட்டிருக்கலாமே.'
         'எத்தினை தரம் தான் அதுகளின்ட வீட்டை போறது. நான் அங்க போனா முகத்தைத் தூக்கி வைச்சுக்கொண்டு இருக்குங்கள். டெலிபோன் நம்பர் இருந்தா தாறீங்களோ என்டு கேட்டனான். அதுகள் தெரியாதென்டு சினக்குதுகள்.'
         'என்ட கடவுளே! என்ட பிள்ளைய வெளிநாட்டில கட்டிக் குடுத்திட்டு நாங்கள் படுற பாடு உன்ட கண்ணுக்குத் தெரியலையா? எப்படி இருக்கிறாளோ தெரியலையே'
'ஏன் கடவுளேஇ வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு உன்ர மகளைக் கட்டிக்குடுக்கச் சொன்னவர்?; ஊரிலை மாப்பிள்ளை இல்லையென்டே வெளிநாட்டிலை பார்த்தனீ?'
          'நீங்களும் என்னைக் கஷ்டப்படுத்தாதையுங்கோ. நான் யோசிக்காம செய்திட்டன். பிள்ளை வசதியா வாழட்டும் என்டுதானே வெளிநாட்டில கட்டிக்குடுத்தனான்.' மகள் வதனியைப் பற்றிய தகவல் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பார்வதியம்மாவை வார்த்தைகளால் காயப்படுத்த விரும்பாதவர் வாயை அடக்கிக் கொண்டார்.
குணத்திற்கும் பார்வதியம்மாவிற்கும் இரண்டு பெண் பிள்ளைகள். ஒருத்தி வதனி மற்றவள் ரதினி. குணம் மின்சாரசபை ஊழியராகப் பணியாற்றியவர். அவரது சேவைக் காலம் முடிந்ததும் ஓய்வெடுத்துக் கொண்டார். வதனி வெளிவாரியாக பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டிலிருந்தாள். திருமண வயதை எட்டிய வதனிக்கு ஊரெல்லாம் மாப்பிள்ளை பார்த்து திருப்தி அடையாத பார்வதியம்மா வெளிநாட்டு வரணை எதிர்பார்த்தார். மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். யாழ்ப்பாணத்திலேயே மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைப்போம் என்று குணம் கூறவும்இ அதைக் காதிலையும் வாங்காதவர் யாழ்ப்பாணத்துச் சம்பந்தங்களைத் தட்டிக் கழித்தார். 'பார்வதியம்மா! வெளிநாட்டிலை இருந்து நல்ல வரன் ஒன்டு வந்திருக்கு. பெடியன்ட குடும்பமே வெளிநாட்டிலையாம். அவன் தன்ட ஊரில தான் பெண் எடுக்கோணும் என்டு சொன்னதால வீட்டுக்காரர் யாழ்ப்பாணத்தில பொம்பிளை தேடினம். உங்களுக்குப் பிடிச்சிருந்தா வதனியிட சாதகத்தையும்இ போட்டோவையும் தாங்கோ' என்றார் புரோக்கர் கனகசுந்தரம். 'நல்ல இடமென்ட பேசி முடியுங்கோ. நான் வதனிட சாதகத்தைத் தாறன்.'
     'முக்கியமா போட்டோவையும் தாங்கோ பார்வதியம்மா' சாதகத்தையும் வதனியின் புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார் புரோக்கர் கனகசுந்தரம். வெளிநாட்டுச் சம்பந்தம் பார்த்துக் கொடுத்தால் புரோக்கர்களுக்கு தரகுப்பணம் கொஞ்சம் கூடுதலாகவே கிடைக்கும் ; என்பதால் எதைப்பற்றியும் அவர்கள் யோசிப்பதில்லை. மாப்பிள்ளையைப் பற்றி சரியாக விசாரிக்காமல் பெண்னைக் கட்டி வைத்து விட்டுத் தரகுப்பணத்தை வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள். 'பார்வதியம்மா!'  வாசலில் நின்று கூப்பிட்ட கனகசுந்தரத்தை உள்ளே அழைத்தார் பார்வதியம்மா. 'இரண்டு சாதகத்திற்கும் நல்ல பொருத்தம். வதனியையும் பெடியனுக்குப் பிடிச்சிட்டுதாம்'';.   'அப்படியோ! கேட்கச் சந்தோஷமாயிருக்கு. இருங்கோ. நான் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்.' 'இப்ப வேணாம் முதல்ல இதைப் பேசி முடிப்பம். பெடியன் இலங்கைக்கு வர மாட்டானாம். நீங்க தான் இந்தியா போக வேணும். இந்தியாவில கலியாணத்த முடிச்சிட்டு பெடியன் கையோட வதனியைக் கூட்டிக் கொண்டு போயிடுவானாம்'
  'உண்மையாவே! அது நல்லம் தானே. கலியாணத்தை முடிச்சிட்டு புருஷனப் பிரிஞ்சிருக்கிறத விட மாப்பிள்ளையோட சேர்ந்து போறது நல்லது' பார்வதியம்மாவிற்கு நன்றாகப் பிடித்துப் போய்விட்டதை அவரது பேச்சிலிருந்து புரிந்து கொண்ட கனகசுந்தரமஇ; நைசாக அடுத்த அடியைப் போட்டார். 'சீதனம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கினம். வெளிநாட்டு மாப்பிள்ளையென்டா சும்மாவே! பெடியன் வேற அங்க சொந்தமா தொழில் செய்யுறான். வதனி அங்க போனா வசதியான வாழ்க்கைதான்' ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார் தரகர் கனகசுந்தரம். வெளிநாட்டு மோகத்தில் மயங்கியிருந்த பார்வதியம்மாவிற்கு இந்தச் சம்பந்தத்தை விடுவதற்கு விருப்பமில்லை. 'அதுக்கென்ன எப்படியென்டாலும் சீதனம் குடுக்கத்தானே வேணும். கடனை வாங்கியென்டாலும் இந்தக் கலியாணத்தை நடத்துவம். பிறகு வதனி அங்க போனா அனுப்புவாள் தானே'  என்ற பார்வதியம்மாவிடம் 'எனக்கென்னமோ இந்தச் சம்பந்தத்தில துளி கூட விருப்பமில்லை. யோசிச்சு முடிவெடுப்பம் பார்வதி. அவசரப்படாதை' என்றார் குணம். 'விசர்க்கதை கதையாதையுங்கோ. இதை விட்டா நல்ல சம்மந்தம் கிடைக்காதப்பா. தலையை அடமானம் வைச்சாவது கலியாணத்தை முடிப்பம். குணத்தை அடக்கி விட்டு கனகசுந்தரத்தின் பக்கம் திரும்பி 'நீங்க பேசி முடியுங்கோ. எங்களுக்கும் சம்மதம் என்டு சொல்லுங்கோ.' 'சரி அப்போ நான் வாறன்.  எல்லாம் நல்லதா நடக்கட்டும்'  கனகசுந்தரம் அங்கிருந்து அகன்றார்.
   திருமணமும் முற்றாகி குடும்பமாக இந்தியாவிற்குச் சென்றார்கள். இந்தியாவில் பிரமாண்டமாகத் திருமணம் நடந்து முடிந்தது. வட்டிக்குப் பணம் வாங்கிஇ காணியையும் விற்றுஇ வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த பணத்தையும் எடுத்துஇ ஒருவாறு பணத்தைப் புரட்டி ஐம்பது லட்சம் சீதனத்தையும் கொடுத்து விட்டார்கள். இளையவள் ரதினியின் எதிர்காலத்தை யோசிக்காது மூத்தவள் வதனியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிவைத்த பெருமிதத்தில் திழைத்திருந்தார் பார்வதியம்மா. திருமணம் முடிந்து இரு கிழமைகளில் மாப்பிள்ளை கையோடு வதனியைக் கனடாவிற்கு அழைத்துச் செல்லவும், அவளை வழியனுப்பி விட்டு இலங்கை வந்து சேர்ந்தார்கள்.
   வதனி கனடா சென்று ஒரு மாதம் வரையும் பார்வதியம்மாவோடு தொலைபேசியில் தொடர்பிலிருந்தாள். அடிக்கடி கடிதமும் போடுவாள். ஒரு மாதத்தின் பின்பதாக வதனியோடுள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது. பார்வதியம்மா எத்தனையோ கடிதங்கள் போட்டு விட்டார். எந்தப் பதில் ;;கடிதமும் வரவில்லை. மகளோடு பேச முடியாமல் பார்வதியம்மாவும் குணமும் நிலை தடுமாறினார்கள். கடிதக்கரனின் வரவுக்காய் பார்வதியம்மா தினமும் வாசலில் தவமிருப்பார். இறுதியில் ஏமாற்றமே கிடைக்கும். மாப்பிள்ளை வீட்டாரின் சொந்தக்காரர்களை எல்லாம் விசாரித்துவிட்டாகியது. யாருமே இதுவரையிலும் சரியான தகவலைச் சொல்லவில்லை. தரகர் கனகசுந்தரமும் தலைமறைவானார். கண்ணைக் கட்டி நடுக்காட்டில் விட்டதைப் போல் பார்வதியம்மா செய்வதறியாது திகைத்தார். வதனியைப் பற்றிய செய்தியறிவதற்காக நாயாக அலைந்து திரிந்தார் குணம்.
          'எல்லாமே உங்களால தான் வந்தது. அப்பா அப்பவே சொன்னவர் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்டு. கேட்டனீங்களே அக்காவை இங்கயே கட்டிக் குடுத்திருந்தா ஒரு கரைச்சலும் இருந்திருக்காது. நாங்களும் நிம்மதியா  இருந்திருக்கலாம். கடனை வாங்கி கலியாணத்தைக் கட்டிவைச்சனீங்களெல்லோஇ இப்ப என்னத்தைக் கண்டீங்கள்?'  ரதினியின் உள்ளக் குமுறல்கள் வார்த்தைகளாக வெளியே வந்தன. 'ஓம் பிள்ளை ஒன்டப் பற்றியும் யோசிக்காம கட்டிக் ;குடுத்திட்டன்.' தினமும் வீட்டில் இதே புராணமாகவேயிருந்தது. கனடாவில் சொந்தக்காரர் இருப்பவர்களின் வீடு வீடாக ஏறி இறங்கி விட்டார்கள். வதனியைப் பற்றி யாருக்குமே தெரியாதென்றே கூறினார்கள்.
      மாலை நேரம் இருக்குமஇ; மூவரும் விறாந்தையிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாசலிலே வான் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கவேஇ மூவரும் எழுந்து வாசலுக்குச் சென்று பார்த்தார்;கள். இருபத்தியாறு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்திஇ இடுப்பில் குழந்தையோடு வானை விட்டுக் கீழே இறங்கினாள். அவளது தோற்றமும்இ ஆடையும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்பதை வெளிக்காட்டியது. 'நீங்க வதனிட அம்மாவா?' அந்தப் பெண் கேட்டாள். 'ஓம் நான் வதனிட அம்மாதான். பிள்ளையிட்ட இருந்தா வாறீங்கள்? உள்ள வாங்கோ பிள்ளை.' மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் நின்றார் பார்வதியம்மா. உள்ளே வந்து அமர்ந்து கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். வதனியின் திருமணப் புகைப்படம் அழகாகப் பிறேமிடப்பட்டு ஷோக்கேசின் மீது வைக்கப்பட்டிருந்தது. ''நான் வதனிட ப்ரண்ட் வதனியோட தான் இங்க படிச்சனான். மேல்ப் படிப்புக்காக கனடா போய் அங்கேயே இருந்திட்டன். என்ட மிஸ்டர் யாழ்ப்பாணத்தில தான் இருந்தவர். பிறகு என்னைக் கல்யாணம் பண்ணிக் கனடா வந்திட்டார். வெளிநாட்டு மாப்பிள்ளையல நம்பேலாது தானே. வதனி திருமணம் முடிச்சு கனடா வந்தது எனக்குத் தெரியா. ஒரு நாள் வதனிய ரோட்டிலை கண்டனான். கண்டு கதைக்கும் போதுதான் தெரியும்.' 'வதனியே உங்களை இங்க போகச் சொன்னது? என்ன சொன்னவள்?' 'வதனிய கண்கொண்டு பார்க்கேலாது. கேவலமாப் போயிட்டாள். மெலிந்து போய் சொக்கெல்லாம் ஒட்டிப்போயிட்டு.' 'ஏன் பிள்ளைக்கு ஊர் ஒத்துக் கொள்ளேல்லையே? அங்கத்தச் சாப்பாடும் பிள்ளைக்குப் பிடிச்சிருக்காது' நிலைமையறியாது பார்வதியம்மா கூறினார். 'அக்கா எப்ப வாறாவாம்? ஏதாவது சொன்னவாவ?' ரதினி ஏக்கத்தோடு கேட்டாள். 'இங்க வாற நிலைமையில அவளில்லை. நான் வதனியப் பார்க்க அவளிட வீட்ட போனனான். அப்பதான் இந்த லெட்டரை உங்களிட்ட குடுக்கச் சொன்னவள்.' கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள் ரதினி.
      'அன்புள்ள அம்மாஇ அப்பாஇ ரதினிக்கு! வதனி எழுதுவது நீங்கள் எல்லோரும் நலமா? வெளிநாட்டிலை என்னைக் கட்டிக்கொடுத்த சந்தோஷத்தில அம்மா இருப்பா. எப்படி கடனை அடைப்பது என்று தெரியாம அப்பா கஷ்டப்படுறாரா? பாவம் என்னால அப்பாக்குத் தான் கஷ்டம். நீங்க நினைச்ச மாதிரி இங்க நான் சந்தோஷமா இல்லை. வேலைக்காரியை விட கேவலமாக இருக்கிறன். அவருக்கு ஏகப்பட்ட பெண்களோட தொடர்பு இருப்பது இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரியும். என்னை வெளியில விடுறதில்லை. உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்குது அம்மா. ஒவ்வொரு நாளும் சிகரெட்டால சுட்டு உடம்பில காயமில்லாத இடமே இல்லை. தினம் தினம் நரக வேதனை அனுபவிக்கிறேன். அம்மா! நான் உயிரோட மீண்டு வந்து உங்களைப் பார்ப்பேனோ எனக்குத் தெரியாது. உங்களிட்ட கெஞ்சிக் கேட்கிறன் ரதினிக்கு மட்டும் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்திடாதேயுங்கோ. அவளாவது நிம்மதியா சந்தோஷமா வாழட்டும். இனியாவது வெளிநாட்டு மாப்பிள்ளை ஆசையை விட்டிடுங்கோ. நான் மட்டுமில்லை என்னைப் போல இங்க எத்தனையோ பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைய நம்பி வந்து வாய் விட்டு வெளியில சொல்ல முடியாம தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கட ஊரிலையும் இனி யாரையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் குடுக்க வேண்டாமெண்டு சொல்லுங்கோ. இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேணும் என்டு நான் நினைக்கேல்ல. ஆனா என்னைப் போல இனியும் ஒருத்தரும் கஷ்டப்படக் கூடாதென்டு தான் இந்தக் கடிதத்தை எழுதி என்ட ப்ரண்டிட்ட குடுத்தனான். கடவுள் அவளை என் கண்ணில காட்டினதால தான் இந்தக் கடிதத்தை அவளிட்ட குடுக்க முடிந்தது. இனி அவளையும் சந்திப்பனோ தெரியேல்லை. இந்த விஷயம் அவருக்குத் தெரிஞ்சா என்னைக் கொண்டிடுவார். மரணத்தின் கையில என்ட வாழ்க்கைய குடுத்திட்டு மரணத்தோடு அனுதினமும் போராடிக் கொண்டிருக்கி;றேன். நிம்மதியாத் தூங்கி நிறைய நாளாகிட்டு. என்ட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை. ஊருக்கு ஓடிவர வேண்டும் போல இருக்கு.' படித்து முடித்த ரதினி கடிதத்தை பார்வதியம்மாவின் முகத்தில் வீசி எறிந்தாள்.
  'போதுமா இதுக்குத் தானே நீங்க ஆசைப்பட்டீங்க. என்ட அக்காட வாழ்க்கை???? ஐயோ! நான் எப்படி அவளைப் பார்ப்பேன்' கத்தி அழுதாள் ரதினி. கடிதத்தைப் படித்துவிட்டு எந்த ஆட்ட அசைவுமின்றி மரத்துப் போய் நின்ற பார்வதியம்மாவைக் கொலைக் குற்றவாளியைப் பார்ப்பதைப் போல் குணம் அவரின் முகத்தைப் பார்த்தார். 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பிரியோசனம் இல்லை. இனியாவது யோசித்து செயற்படுங்கோ. நடந்தது நடந்து போச்சு. அதை மாத்த முடியுமா? கவலைப்படாதீங்க அம்மா. நான் வாறன்.' வதனியின் நண்பி விடைபெற்றாள்.
     அவளை வழியனுப்ப வாசல் வரைக்கும் சென்ற ரதினியிடம் 'வதனி இனி வரமாட்டாள். வதனியப் போய் பார்த்திட்டு அவள் லெட்டர் ஒன்டு தர அதையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேருவதற்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு. உங்க அக்கா வதனி இப்ப உயிரோட இல்லை. மனச தேற்றிக் கொள்ளுங்கோ. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதை ஆறுதலா எடுத்துச் சொல்லுங்கோ.  அவர்களுக்குச் சொல்லுறதிற்கு எனக்குத் தைரியமில்லை.' என கூறிவிட்டு வானில் ஏறிக்கொண்டாள். திகைத்துப் போய் அந்த இடத்திலேயே நின்று கொண்டாள் ரதினி. வாய் விட்டு அவளால் அழ முடியவில்லை.
       'வெளிநாட்டு மாப்பிள்ளையாம். பொம்பிளை குடுத்து வைத்தவள்' திருமணச்சடங்கொன்றில் கலந்து விட்டு இரு பெண்கள் வீதியில் சம்பாஷித்துக் கொண்டு போன வார்த்தைகளில் ஒன்று. 'திருந்தா ஜென்மங்கள். வெளிநாட்டு மாப்பிள்ளையாம் வெளிநாட்டு மாப்பிள்ளை. சீ..... இதுகள் பட்டாலும் திருந்தாதுகள்' குமுறினாள் ரதினி. வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் படலம் யாழ்ப்பாணத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் எத்தனை பெண்கள் பலியாகப் போகிறார்களோ.........

No comments: